>

ad

National Vocational Qualification (NVQ) என்றால் என்ன?

National Vocational Qualification (NVQ) என்றால் என்ன?



அறிமுகம்

 இலங்கை புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய 2019 ஆண்டு  333,000 மாணவர்கள் பாடசாலைக் கல்விக்காக முதலாம் ஆண்டுக்கு சேர்ந்துள்ளார்கள் என்பதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவின் தகவல்களுக்கு அமைய 2019 ஆம் ஆண்டு 30,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடிப்படையில் வருடாந்தம் பாடசாலைக்கு உள்வாங்கப்படுகின்ற மாணவர்களில் சுமார் 10% மாத்திரமே பல்கலைக்கழக நுழைவைப் பெற்று பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்கின்றார்கள். போட்டிகரமான கல்வி முறை மற்றும், அனைவருக்கும் உயர்கல்வி வழங்குவதற்கான வளங்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் இந்தநிலை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது. பாடசலையில் இணைகின்ற மாணவர்களில் 10% வீதத்தினர் பல்கலைக்கழகங்களுக்கு சென்று விட  மீதமாகின்ற 90% மாணவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு தத்தமது உயர்கல்விக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள வேறு வழிகளே இல்லையா என்றால். ஆம் இருக்கின்றது NVQ தரச் சான்றிதழ் என்ற அடிப்டையில் மிகச் சிறந்த தெரிவுகள் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றதன. அந்த வாய்ப்புக்கள் என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகின்றது.

 பின்னனி

பாடசாலையைக் கல்வியை நிறைவு செய்கின்ற அனைத்து மாணவர்களாலும் பல்கலைக்கழகம் பிரவேசிக்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. எனவே அவ்வாறு வெளியாகின்ற மாணவர்களில் பலர் ஏதோ ஒரு தெழிநுட்ப பாடநெறியை அல்லது தொழில் சார் பாயிற்சி நெறியை பயில்வதற்காக முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு இவர்கள் பயில்கின்ற பாடநெறிகளில் பல NVQ  தரம் சார்ந்த பாடநெறிகளாக காணப்படுகின்றன. உண்மையில் இந்த NVQ என்றால் என்னஎன்பது குறித்து அறிந்துகொள்ளாத நிலையிலேயே பலமாணவர்களும தங்களது NVQ கற்கை நெறிகளை ஆரம்பிக்கின்றார்கள். NVQ என்பது குறித்து சரியான அறிவைப் பெற்றுக்கொள்வதானது தனக்குப் பொறுத்தமான பாடநெறியினைத் தெரிவு செய்து கொள்வதற்கும் தனது எதிர்கால இலக்குகளை அமைத்து அவற்றை நோக்கி சரியான முறையில் பயணிப்பதற்கும் உதவியாக அமையும்.

 

பொதுவாக ஏதாவதொரு  NVQ தரச் சான்றிதழ் ஒன்றினைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பவகையான சிறந்த வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாத ஒரு விடயமாகும். இலங்கையைப் பொறுத்தவரை தற்போதைய காலகட்டத்தில் NVQ தகைமையுடையவர்கள் மாத்திரமே சேர்த்துக்கொள்ளப்படுகின்ற அடிப்படையிலான பல வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றது என்பதனை தொழில்களுக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான  விளம்பரங்களைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. அந்த அளவிற்கு NVQ சான்றிதழ் என்பது பெறுமதிமிக்க ஒன்றாக மாற்றம் பெற்றுவிட்டது..

 

 NVQ என்றால் என்ன?

 

 National Vocational Qualification என்பதன் சுருக்கமாகவே  NVQ என்ற பதம் பிரயோகிக்கப்படுகின்றது. தேசிய தொழில் தகைமை என்பாதாக இது தமிழில் குறிப்பிடலாம். யாரேனும் ஒருவர் தொழில் ஒன்றினை செய்வதற்காக அந்த தொழில் சார்ந்த அறிவினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனை நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம். அவ்வாறு அவர் அந்த தொழில் சார்ந்த அறிவினைப்  பெற்றுக்கொள்ளாத போது அவரால் அந்தத்தொழிலினை  சரியான முறையில் மேற்கொள்ள முடியாது போய்விடும். அந்த வகையில் அந்தத் தொழில்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அவசியமான தொழிநுட்ப அறிவுகள் என்னென்ன என்பதனை சரியான முறையில் அடையாளம் கண்டு அவற்றுக்கு அவசியமான தேர்ச்சிகள் என்ன என்பதனை ஒரு ஒழுங்கு முறையில் அளவிட்டு அந்த அளவீடுகளை ஒரு தரப்படுத்தலின் அடிப்படையில் வகைப்படுத்துகின்ற செயற்பாடே தேசிய தொழில்த் தேரச்சி அல்லது தகைமை என்தாக வரையறுக்கப்படுகின்றது.

 

உதாரணமாக ஒரு காரியாலயத்தில் கணனி தட்டச்சு வேலையில் ஈடுபடுகின்ற ஒருவரை எடுத்துக்கொள்வோமானால் கடிதம் ஒன்றை தட்டச்சிடுதல், அதனை கணனியில் பத்திரப்படுத்தி வைத்தல், தேவைப்படுமாயின் அதனை அச்சிடல் என்ற அடிப்படையில் அவர்செய்ய வேண்டிய பணிகள் அமைந்திருக்கும்.  இந்த பணியை அவர்  செவ்வனே நிறைவேற்ற வேண்டுமாயின் சரியான முறையில் கணனியை இயக்கிக் கொள்வது, கணனியில் தட்டச்சு செய்வதற்கு பொறுத்தமான மென்பொருள் ஒன்றைத் தெரிவு செய்வது, அந்த மென்பொருளை இயக்குவது.  தேவையான மொழியில் கடித​த்தை தட்டச்சு செய்துகொள்வது,  குறித்த தாள்களுக்கு ஏற்ற வகையில் கடிதத்தை வடிவமைத்துக்கொள்வதுதட்டச்சிட்ட கடிதத்தினைப் பிரதி எடுப்பதுகுறித்த கடிதத்தினை எதிர்காலத் தேவைக்காக சரியான முறையில் கணனிக்குள் பாதுகாத்து வைப்பது, போன்ற விடயங்கள் குறித்து அவரிடம் போதுமான அறிவும் ஆற்றுலும் காணப்படவேண்டும்..  இந்த அடிப்படையில் ஒவ்வொரு தொழிலுக்கும் அவசியமான தொழில்சார்ந்த அறிவு மற்றும் திறன்கள் என்னென்ன என்பதனையே தேசிய தொழில் தகைமையானது கணிப்பிடுகின்றது. அத்துடன் ஒவ்வொரு தொழில்களுக்குமான தெழிற் திறன் தேவைப்பாடுகளை ஒரு நிர்ணயத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில் யாரேனும் ஒருவர் இந்த அடிப்படையிலான திறன்களைப்  பெற்றிருப்பாரானால் அவர் தன்னிடமுள்ள திறன்களை போதுமான சான்றுகள் ஊடாக நிரூபித்து அதற்கான தொழில் திறன் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். குறித்த தொழில் மேற்கொள்வதற்காக அவரிடம் இருக்கவேண்டிய திறன்கள் குறித்து  மதிப்பீடு ஒன்றினை மேற்கொண்ட பின்னர் அவர் அந்த தொழிலை மேற்கொள்வதற்கான திறன்களை தன்னகத்தே கொண்டுள்ளார் என்பதனை உறுதி செய்து வழங்கப்படுகின்ற சான்றிதழே NVQ என்பதாகும்.

 

இந்த சான்றிதழை வழங்குபவர் யார்?

இலங்கையில் அனைத்துத் துறைகளுக்குமான NVQ சான்றிதழ்களை வழங்குகின்ற அரச நிறுவனமாக மூன்றாம் நிலைக்கல்வி. தொழிற்கல்வி ஆணையகம் இயங்கி வருகின்றது. TVEC  என்ற சுருக்கப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற  இந்த நிறுவனமானது மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில் கல்விக்கான தர நிர்ணயம் வழங்குவது குறித்த அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாகும். இந்த தேசிய தொழில் தரப்படுத்தல் கட்டமைப்பானது NVQ 1 மட்டம் முதல் 7 ஆம் மட்டம் வரையான 7 படிநிலைகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தொழிலுக்கும் தேவையான திறன்கள் என்ன என்பது குறித்து தனித் தனியாக ஆராய்ந்து அவைகள் தரப்படுத்தப்பட்டுள்ளது.

 குறிப்பிட்ட தொழில்களை  முறையாக நிறைவேற்றுவதற்கு எந்த மட்டத்திலான திறன்கள் அவசியப்படுகின்றன என்பது இந்த நிறுவனத்தினால் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டிருப்பது. எனவே  குறித்த துறைக்கான NVQ மட்டத்தைப்  பெற்றிருப்பவரால் அந்த  தொழிலை கட்சிதமாக மேற்கொள்ளலாம் என்பது உறுதி செய்யப்படுகின்றது. அதாவது மேலே குறிப்பிட்ட கணனி தட்டச்சு செய்கின்ற  தொழிலுக்கு தேவையான தொழில் திறனின் அனவு NVQ 2 ஆவது மட்டத்தில் அடங்குகின்றது என்பதாக வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் காணனி சம்பந்தமான NVQ 2 சான்றிதழ் பெற்றருக்கின்ற ஒருவர் மேற்படி தொழிலை புரிவதற்கான அனைத்து தகைமைகளையும் கொண்டிருக்கின்றார் என்பது உறுதிசெய்யப்படுகின்றது.

 

TVEC  நிறுவனம்
 

1990 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் தொழில்க் கல்விச் சட்டத்தின் கீழ்  தொழில்நுட்பக் கல்வி தொழில்க் கல்வி மற்றும் பயற்சிகள் சார்ந்த துறைகளில் உயரிய நிலையில் இருக்கின்ற ஒரு அமைப்பாக 1991 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணையகம் நிறுவப்பட்டது. குறித்த துறைகள் தொடர்பிலான கொள்கைகளை அமைத்தல், திட்டமிடல், தரத்தினை உறுதிப்படுத்துதல், நாட்டின் மூன்றாம் நிலைக் கல்வி தொழில் கல்வி என்பவற்றை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றை மேம்படுத்தல் என்பன இந்த நிறுவனத்தின் முதன்மையான பொறுப்புக்காளாகும். அத்துடன் 1999 ஆம் ஆண்டில் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதிருத்தங்களின் பிரகாரம் இந்த ஆணையகத்தின் தலைவர் உட்டபட 17 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் இவர்களில் 10 பேர் தனியார் துறை மற்றும் சங்கங்களைப் பரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாகின்றனர். அதன் அடிப்படையில் தனியார் துறையினதும் பங்களிப்பினைப் பெற்று தேவைகளுக்கு ஏற்ற அடிப்படையிலான பயிற்சிநெறிகளை அமைத்துப் பராமரிக்கின்ற ஒரு ஆணையகமாக இயங்கி வருகின்றது.

 

NVQ சான்றிதழை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

 

NVQ சான்றிதழை இரண்டு முறைகளில் பெற்றுக்கொள்ளலாம். யாரேனும் ஒருவரிடம் காணப்படுகின்ற திறன்களை அல்லது தகைமைகளை நிரூபித்தல் ஊடாக NVQ சான்றிதழைப் பெற்றுக்கொள்கின்ற முறை RPL (Recognition of prior learning)    என அழைக்கப்படுகின்றது. உதாரணமாக மேலே குறிப்பிட்ட கணனி தட்டச்சு பணிக்குரிய திறனின் அளவு NVQ தரம் 2 என்பதாக வைத்துக்கொள்வோம். அந்த தட்டச்சு தொழில் இருப்பவர் அந்த தொழிலுக்காக மூன்றாம் நிலைக் கல்வி, தொழில்க் கல்வி நிறுவனம் நிர்ணயித்திருக்கின்ற திறன்கள் தன்னிடம் இருக்கின்றது என்பதனை ஆதாரங்களுடன் நிரூபிப்பாராயின் அவரால் குறித்த துறைக்கான NVQ 2 என்ற சான்றிதழினைப் பெற்றுக்கொள்ளலாம்.  ஏதாவது ஒரு துறையில் பணியாற்றி குறித்த தொழில் சார்ந்த அனுபவத்தின் ஊடாக ஒருவர் NVQ சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான சிறந்ததொரு வழிமுறையாக RPL எனும் முறையை  அடையாளப்படுத்தலாம்.

 

  அடுத்து குறிப்பிட்ட தொழில்களுக்கு அவசியமான திறன்களை  அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடநெறி ஒன்றினை அல்லது பயிற்சியினை பூர்த்திசெய்து அந்தப் பாடநெறிக்கான பரீட்சை அல்லது களப் பயிற்சி என்பவற்றைப் பூர்த்தி செய்வதன் ஊடாக NVQ சான்றிதழ் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.  இவ்வாறு சான்றிதழ் பெற்றுக்கொள்கின்ற முறையானது ஊடீவு CBT ( Competency Based Training )   என அழைக்கப்படுகின்றது. தொழில் ரீதியான எந்த அனுபவமும் இல்லை என்பவர்கள் குறித்த தொழிலுக்காக NVQ சான்றிதழ் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழிமுறையாக இதனைக் குறிப்பிடலாம். கற்கைநெறிகளை பயின்று NVQ சான்றிழ் பெறுவது என்பதாக இதனை சுருக்கமாக்க குறிப்பிடலாம்.

 

இந்த NVQ பாடநெறிகளை எங்கு பயிலலாம்?

 

        NVQ தரத்திலான பாடநெறிகளை வழங்குகின்ற அரச நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் நாடு பூராவும் பரவலாக பல இடங்களிலும் இயங்கி வருகின்றன. பாடசாலைக் கல்வியினை நாட்டில் பல பாடசாலைகள் வழங்குகின்ற போதிலும் சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நடாத்தி அதற்கான சான்றிதழ்களை அந்த நிறுவனமே வழங்குவது போன்றே NVQ பாடநெறிகள்  நாட்டிலுள்ள எந்த நிறுவனத்தினால் நடத்தப்பட்டாலும் அதனை மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கும் பணியினை மூன்றாம் நிலைக் கல்வி, தொழில்க்கல்வி ஆணையகமே மேற்கொண்டுவருகின்றது. எனவே NVQ பாடநெறிகளுக்காக பெற்றுக்கொள்கின்ற சான்றிதழ்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் பெறுகின்ற சான்றிதழாக அமைகின்றது. அந்த அடிப்படையில் எந்த நிறுவத்திடமிருந்து NVQ சான்றிதழைப் பெற்றுக்கொண்டாலும் அவற்றுக்காக சமமான அங்கீகாரம் கிடைக்கப்பெறுகின்றது.


        NVQ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னைய காலங்களை நோக்கும் போது இதற்கு மாற்றமான ஒரு நிலையே இலங்கையில் காணப்பட்டு வந்திருக்கின்றது. ஏதாவது ஒரு தொழில் பயற்சியை இரண்டு நிறுவனங்கள் வழங்குமாயின் அந்த பாட நெறியின் உள்ளடக்கமானது நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபட்ட அமைப்பிலேயே காணப்பட்டு வந்தது. இவ்வாறான பாடநெறிகள் ஊடாக பெறப்படுகின்ற சான்றிதழ்கள் கூட நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபட்டதாக காணப்பட்டது. சில நிறுவனங்களின் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்கள் வழங்குகின்ற சான்றிதழ்களுக்கு எந்த மதிப்பும் இல்லாத நிலை காணப்பட்டது NVQ சான்றிதழ் முறைமை அமுலுக்கு வந்ததன் பின்னர் இந்த நிலை மாற்றம்  பெற்றது. இன்றளவில் அரச மற்றும் தனியார் துறைகளின் சில தொழில் துறைகளுக்காக NVQ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுகின்ற அளவுக்கு NVQ சான்றிதழ் அங்கீகாரம் பெற்றிருக்கின்றது. 

 

NVQ சான்றிதழ்களை பெறுபவர்களுக்கு கிடைக்கின்ற பயன்கள் என்ன?

 

NVQ சான்றிதழ்களுக்காக வெளிநாடுகளில் சிறந்த அங்கீகாரம் காணப்படுவதன் காரணமாக அதிக சம்பளத்துடன் கூடிய சிறந்த வேலைவாய்ப்புக்களை பெறுகின்ற வாய்ப்பு  கிடைக்கின்றது. குறித்த நபர் குறித்த தொழில் தொடர்பான போதுமான அறிவினையும் திறன்களையும் பெற்றுள்ளார் என்பதனை குறித்த சான்றிதழ் உறுதி செய்வதனால் அவரது தொழில் துறையில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுகின்றது. அது மாத்திரமன்றி அவர் தற்போதுள்ள தொழிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு தான் விருத்திசெய்துகொள்ளக் வேண்டிய விடயங்களை இலகுவாக இனங்கண்டு அடுத்த கட்டத்துக்கு தன்னை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுகின்றது. அந்த அடிப்படையில் அவரால் தனது அடுத்த கட்ட இலக்கை அடைந்துகொள்வதற்கான பாடநெறிகளை பயின்று தான் பயின்றிருக்கின்ற மட்டத்திலிருந்து அடுத்த மட்டத் தகைமையினைப் பெற்றுக் கொள்வதானது அவரது தொழிற் துறையைப் பொறுத்தவரை மிகவும் பெருமதியான ஒன்றாகின்றது.

 NVQ தரத்திலான பாடநெறிகளை வழங்குகின்ற நிறுவனம் ஒன்றினை எவ்வாறு அடையாளம் காண்பது.?

 

    NVQ சான்றிழ் வழங்குகின்ற பொறுப்பு தேசிய மூன்றாம் நிலைக் கல்வி, தொழில்க் கல்வி ஆணையகத்திடம் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்ற அடிப்படையில் NVQ சான்றிதழ் வழங்குகின்ற நிறுவனங்களைப் பதிவு செய்து அவற்றின் பட்டியல் ஒன்றினையும் TVEC நிறுவனம் தன்னகத்தே வைத்திருக்கின்றது. நீங்கள் ஏதாவது நிறுவனம் ஒன்றில் NVQ பாடநெறி ஒன்றினைப் பயில்லதற்கு எத்தனிப்பீர்களாயின்   https://nvq.gov.lk/Insreg_Home/insreg_Institute_Select_Search.php எனும் தேசிய மூன்றாம் கல்வி தொழிற் கல்வி ஆணையகத்தின் இணைய தள முகவரிக்குச்  சென்று நீங்கள் பயில்வதற்காக உத்தேசிக்கின்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்துகொள்ளுங்கள்.NVQ சான்றிதழ் வழங்குதில்லை என்ற அடிப்படையில் இயங்குகின்ற நிறுவனங்களாக இருந்த போதிலும்   அவைகளும் தேசிய மூன்றாம் நிலைக் கல்வி தொழிற் கல்வி ஆணையகத்தில் பதிவுசெய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

நீங்கள் பயில்கின்ற பாடநெறிகளின் பெறுமதி அல்லது கட்டணங்கள் எந்த அளவு பெரியதாக இருந்தாலும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு எந்த  விதமான பெறுமதியோ அங்கீகாரமோ இருக்கப் போவதில்லை. அவைகள் ஒரு காகிதத் துண்டாக மாத்திரமே கருதப்படும். பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் பாடநெறிகளைப் பயில்வது என்பது உங்களது பணத்தையும் காலத்தையும் வீணாக்குகின்றீர்கள் என்பதாகவே கருத வேண்டும்.

 

குறிப்பாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையோ அல்லது உயர் தரப் பரீட்சையோ நடந்து முடிந்துவிட்டால் உயர்கல்வி  வழங்குகின்றோம் என்ற அடிப்படையில் வீதி வீதியாக  பல வர்ணங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்படுவதுண்டு. அவ்வாறு வினியோகிக்கப்படுகின்ற துண்டுப் பிரசுரங்களில் புலமைப்பரிசில்கள் என்றும் 50% அல்லது அதனிலும் அதகமான வீதங்களில் தள்ளுபடி தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அது மாத்திரமன்றி ஒரு பாடநெறிக்கான கட்டணத்தைச் செலுத்தி ஆறு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகவும் குறிப்பிடப்படும். இந்த நிறுவனங்கள் இவற்றுடன் நின்றுவிடுவதில்லை சாதரண தரப் பரீட்சையோ அல்லது உயர் தரப் பரீட்சையோ எழுதுகின்ற மாணவர்களின் வீட்டு முகவரிகளை ஏதோ ஒரு வழியில் பெற்றுக்கொண்டு உங்களுக்காகவே  உருவாக்கப்பட்ட பாடநெறியிது உங்களுக்காக மாத்திரம் 50% தள்ளுபடி தருகின்றோம் என்பதாக துண்டுப் பிரசுரங்களை வீட்டுக்கே அனுப்பியும் வைப்பார்கள்.

 

நிறுவனம் எதுவானாலும் அது அரச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றதா என்பதனை தேசிய மூன்றாம் நிலைக் கல்வி  தொழில்கல்வி ஆணையகத்தின் இணையதளத்தில் சென்று பார்வையிடத் தவற வேண்டாம்.

 

உங்களுக்குப் பொறுத்தமான NVQ மட்டங்களை எவ்வாறு தொரிவு செய்வது என்பது குறித்தும் அவைகளை இலவசமாக அல்லது ஆகக் குறைந்த செலவுகளில் பெற்றுக்கொள்ள முடியுமான  வழிமுறைகள் குறித்தும் கீழுள்ள லிங்கில் அறிந்துகொள்ளலாம்  


விபரம் https://www.lankajobinfo.com/2021/02/national-vocational-qualification-nvq.html


எமது வட்சப் குழுமம்.