அரச பணி ஒன்றினைப் பொறுத்தவரையில் அந்த பதவிக்காக சமர்ப்பிக்கின்ற விண்ணப்பப்படிவங்கள் மிக முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. என்னதான் பரீட்சை எழுதி சித்தியடைந்துவிட்ட போதிலும் உரிய முறையில் விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்படவில்லை என்பதாக அல்லது பிழையான தகவ்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டு குறித்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் அரச தொழில் ஒன்றுக்காக விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து இந்தப் பதிவில் குறிப்பிடப்படுகின்றது.
அரச பதவிக்கான அறிவித்தல்கள் அல்லது விளம்பரங்கள்.
அனைத்து அரச தொழில்களுக்கும் ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் போது அது தொடர்பாக பகிரங்க விளம்பரம் ஒன்று வழங்கப்படவேண்டும். இவ்வாறு பகிரங்கமாக அறிவிப்பதற்கான ஊடகங்கள் எவை என்பது குறித்து விண்ணப்பம் கோரப்படுகின்ற பதவிக்கான சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டடிருக்கும். வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்தல், தினசரிப் பத்திரிகை ஒன்றில் பிரசுரித்தல் என்பன தற்போது பொதுவாக நடைமுறையில் உள்ள விடயமாகும்.
அரச பதவிக்கான அறிவித்தல்களின் உள்ளடக்கப்படுகின்ற விடயங்கள் யாவை?
1. ஆட்சேர்ப்பு முறை – பரீட்சை, நேர்முகப் பரீட்சை, இவை இரண்டும் என்ற அடிப்படியில் குறித்த பதவிக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் முறை குறித்து இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. . தேவையான தகுதிகள் - இந்தப் பகுதியில் கல்வித்தகைமைகள், தொழில் தகைமைகள், உடல் தகைமைகள் மற்றும் வேறு தகைமைகள் என குறித்த பதவிக்கு அவசியமான தகைமைகள் குறித்து இந்தப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
3. சேவைக்குரிய கடமைகள் மற்றும் நிபந்தனைகள் - குறித்த பணிக்கு ஏதேனும் நிபந்தனைகள் இருப்பின் இந்தப்பகுதியில் குறிப்பிடப்படும்.
4. வயதெல்லை – விண்ணப்ப முடிவுத் திகதிக்கு எத்தனை வயதுக்கு குறையாமலும் எத்தனை வயதுக்கு அதிகரிக்காமலும் இருக்க வேண்டும் என்பதாக இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
5. பதவிக்குரிய சம்பள அளவு குறிப்பிப்பிடப்படும்.
6. குறித்த பதவிக்கு தெரிவு செய்வதற்கு பரீட்சை நடாத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பின் அந்தப் பரீட்சையில் என்னென்ன பாடங்கள் உள்ளடங்கும், சித்தியடைய எத்தனை புள்ளிகள் பெறவேண்டும். என்பது மற்றும் நேர்முகப் பரீட்சை போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டருக்கும்.
7. விண்ணப்பிக்கும் முறை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும்.
8. பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மற்றும் அவற்றில் கையொப்பத்தினை உறுதிப்படுத்தத் தகுதியுடையவர்களின் விபரங்கள் மற்றும் பரீட்சைக்கான விதிமுறைகள் என்பன குறிப்பிடப்படும்.
9. பரீட்சைக்கான கட்டண விபரங்களும் அதனை எங்கு செலுத்த வேண்டும் என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
10. பரீட்சையின் போது அல்லது நேர்முகப் பரீட்சையின் ஆள்அடையாலத்தினை நிரூபிப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து குறிப்பிடப்படும்.
11. பெறுபேறு வழங்குகின்ற முறைகள்
12. பொய்யான தகவல்கள் வழங்குவதால் ஏற்படும் விளைவுகள்.
13. மற்றும் ஏனைய நிபந்தனைகள்
என்ற அடிப்படையில் பலவகையான விடயங்கள் வேலை வாய்ப்பு அறிவித்தலில் உள்ளடக்கபட்டிருக்கும். இந்தத் தகவல்கள் தொழிலுக்கு தொழில் மாறுபட்டதாக அமையலாம்.
அரச பதவி ஒன்றுக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் கவனிக்கவேண்டிய விடயங்கள் என்ன?
01. வேலைவாய்ப்புக்குறித்த அறிவித்தலை பெற்றுக்கொள்வது.
02. இந்த அறிவித்தல் மூலப்பிரதியுடன் ஒத்துப் போகின்றது என்பதனை உறுதிசெய்துகொள்வது.
03. அறிவித்தலை முழுமையாக வாசித்துக்கொள்வது.
04. தனது கல்வித் தகைமை மற்றும் வயது என்பன குறித்த தொழிலுக்காக கேட்கப்பட்டிருக்கும் தகைமைகளுக்கு ஏற்ப உள்ளது என்பதனை உறுதிசெய்துகொள்வது – (தகுதி குறைந்த அல்லது உரிய வயதுக்குட்படாத விண்ணப்பங்கள் நிராகரிபக்பப்படும்.)
05. குறித்த பதவிக்கு தான் பொறுத்தமானவன் என்பது உறுதியாகுமிடத்து குறித்த அறிவித்தலை பிரின்ட் எடுத்துக்கொள்வது சிறந்தது.
06. அதன் பின்னர் அந்த அறிவித்தலின் பிரகாரம் விண்ணப்பத்தினை தயாரிக்க வேண்டும்.
07. அரச பதவிகளுக்காக இரண்டுவகையான விண்ணப்ப வடிவங்கள் தரப்படுவதுண்டு
i. சுயமாகத் தயாரித்து அனுப்பவேண்டிய விண்ணப்பப்படிவம்..
ii. அறிவித்தலுடன் தரப்பட்டிருக்கும் மாதிரி விண்ணப்பங்களின் அடிப்படையில் . அனுப்பவேண்டிய விண்ணப்பப்படிவம்..
08. அந்த அடிப்படையில் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பின் பயோ டேட்டா தயாரிப்பது போன்று அந்த வைவாய்ப்பு அறிவித்தலில் கேட்கப்படுகின்ற அனைத்து தகைமைகளும் சுயவிபரங்களும் உள்ளடங்கும் வகையில் தயாரித்து அனுப்பலாம். விண்ணப்பம் தயாரிப்பதற்கான அறிவுறுத்தல்கள் இருப்பின் அதற்கு இணங்க தயாரிக்கப்படவேண்டும்.
09. மாதிரி விண்ணப்பத்திற்கு அமைய தயாரித்து அனுப்புமாறு குறிப்பிட்டிருப்பின்ற விண்ணப்பங்கள் அந்த மாதிரி விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் இருக்கின்றதோ அதே அடிப்படையில் தயாரிக்கபடல் வேண்டும். விண்ணப்பம் தயாரிப்பதற்கான அறிவுறுத்தல் பகுதியில் விண்ணப்பத்தின்
- விண்ணப்பம் அமைய வேண்டிய தாளின் அளவு
- முதல் பக்கத்தில் அமைய வேண்டி இலக்கங்கள் (உதாரணமாக 1 முதல் 6 வரையான பகுதிகள் முதல் பக்கத்தில் ஏனைய பகுதிகள் இரண்டாம் மூன்றாம் பகத்திலும் அமையுமாறு வடிவமைத்துக்கொள்ளலாம்)
- விண்ணப்பப்படிவங்கள் தட்டச்சு செய்யப்படவேண்டும் என்பது அவசியமில்லை ஒரு பேனாவைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தாளில் எழுதி விண்ணப்பத்தினைத் தயாரித்துக்கொள்ளலாம்.
- ஏதாவது கடைகள் அல்லது இணையத்தளங்கள் தயாரித்துத்தருகின்ற விண்ணப்பப்படிவங்களாயின் அந்தப் படிவங்கள் குறித்த அறிவித்தலில் தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்திற்கு ஏற்ப அனைத்தும் உள்ளடக்கபட்டுள்ளதா என்பதனைப் பரிசீலித்துக்கொள்ளவேண்டும்.
10. அடுத்து விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் உரிய முறையில் பூரணப்படுத்தப்படவேண்டும்.
- இங்கு முதலெழுத்துடன் பெயர் எவ்வாறு அமையவேண்டும் முழுப்பெயர் எவ்வாறு எழுத வேண்டும் என்பதாக தரப்பட்டடிருக்கும் உதாரணங்களின் அடிப்படையில் எழுதவேண்டும். இங்கு எழுதப்படும் பெயர்தான் அடுத்து உங்களது பரீட்சை அட்டை அதன் பின்னர் நியமனக் கடிதம் என்பவற்றில் குறிப்பிடப்படுவதாக அமையும். எனவே உங்களது தேசிய அடையால அட்டையில் உள்ளவாறு பெயர் விபரங்களை எழுதிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்
- அடுத்து பிறந்த திகதி மற்றும் விண்ணப்பத்தில் கேட்கப்படும் திகதிக்கு வயது என்ன என்பது குறித்து சரியாக கணக்கிட்டு எழுதிக்கொள்ள வேண்டும்.
- கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய விபரங்களை ஒழுங்காக நிரப்பிவிடல் வேண்டும்.
11. அடுத்து உரிய பரீட்சைக் கட்டணத்தினை விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள விதத்தில் பிரதேச செயலகத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ செலுத்தி குறித்த பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
12. பற்றுச்சீட்டின் தகவல்களை விண்ணப்பத்தில் பதிந்துவிடல் வேண்டும்.
13. இந்தப் பற்றுச்சீட்டினை ஒரு நகல் பிரதி எடுத்துக்கொண்டு மூலப்பிரதியினைக் குறித்த இடத்தில் ஒட்டிவிடவேண்டும்.
14. நீங்கள் தற்போது அரச சேவையில் இவ்லையாயின் விண்ணப்பப்படிவத்தில் கையொப்பத்தை உறுதி செய்வதற்கான தகுதி வாய்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றவர்களிடம் பணம் செலுத்திய பற்றுச்சீட்டு ஒட்டப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை எடுத்துச் சென்று அவர் முன்னிலையில் கையொப்பமிட்டு குறித்த திகதியையும் இடவேண்டும்.
15. யார் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டதோ அவரது கையொப்பத்தினையும் பதவி முத்திரையையும் பதித்துக்கொள்ளவேண்டும்.
16. நீங்கள் அரச சேவையில் இருப்பவாக இருந்தால் கையொப்பத்தினை உறுதிப்படுத்துவது உங்களது நிறுவனத்தின் தலைவராக இருத்தல் வேண்டும். இங்கு நிறுவனத் தலைவர் எனப்படுவது உங்களது சுய விவரக் கோவை எந்தக் காரியாலயத்தில் பேணப்படுகின்றதோ அந்த நிறுவனத்தின் தலைவராவார். உதாரமணமாக ஒரு ஆசிரியருக்கு வலையக் கல்விக் காரியாலயத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் நிறுவனத் தலைவராவார். நீங்கள் இந்தப் பதவியைப் பெற்றுக்கொள்வீர்களாயின் உடனடியாக உங்களை தற்போதைய பதவியிலிருந்து விடுவிக்கமுடியும் அல்லது முடியாது என்பதாக குறிப்பிட்டிருக்கும் என்பதால் இந்த பதவியிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யத் தகுதியானவர் இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிடவேண்டும்.
17. மேற்படி இரண்டு வகையான கையொப்பங்களும் (விண்ணப்பதாரி மற்றும் கையொப்பத்தினை உறுதிதிப்படுத்துபவர்) ஒரே நேரத்தில் இடப்படவேண்டும் என்பதனால் அங்கு இடப்படும் திகதி ஒரே திகதியாக இருத்தல்வேண்டும்.
18. கையொப்பமிட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை போட்டோ கொப்பி பிரதியெடுத்து நகல் பிரதியை தங்கள் வசம் வைத்துக்கொண்டு மூலப் பிரதியை தபால் உரையில் இட்டு ஒட்டிவிடவேண்டும்.
19. தபாலுறையில் அனுப்பவேண்டிய முகவரியாக விளம்பரத்தில் குறிப்பிடப்படும் முகவரியினை எழுத வேண்டும். (விளம்பரத்தின் இறுதியில் நிறுவனத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி வேறு ஓன்றாக அமையலாம் எனவே விண்ணப்பம் ஆனுப்புதல் குறித்த அறிவுறுத்தலை தெளிவாக வாசித்து அங்கு குறிப்பிடப்படும் அனுப்பவேண்டிய முகவரி என்ன என்பதனை எழுதவும்.)
20. தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கின்ற பதவியினை எவ்வாறு குறிப்பிடவேண்டும் என்பதாக அறிவித்தலில் குறிப்பிட்டதற்கு இணங்க எழுதி பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும்.
21. பதிவுத் தபாலுக்காக தரப்படுகின்ற உறுதிப்படுத்தும் சீட்டை உங்களிடமுள்ள நகல் பிரதியுடன் இணைத்து குறித்த தொழிலுக்கான விளம்பரத்தின் பிரதியினையும் அதனுடன் இணைத்து ஒரு கோவையில் இட்டு பாதுகாக்கவும்.
22. விண்ணப்பம் ஏற்கப்படும் இறுதித் திகதியில் தபால் முத்திரை பொறிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்படும் போது அதில் கட்டங்களில் இடுமாறு கூறப்படுகின்ற இலங்கங்கள் சரி தவறு அடையாலங்கள் என்பவற்றை இடும்போது உரிய கவனம் செலுத்த தவறவேண்டாம். இந்த விண்ணப்பப்படிவங்களின் தகவல்களைப் பொறுத்தே உங்களது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் ஒரு முறைக்கு பல முறைகள் சரிபார்த்துக்கொள்வது பல சிக்கலகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும்.
தொகுப்பு - Lankajobinfo.com