அரச மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அரச ஊழியர்கள் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளவேண்டிய திறன்கள் குறித்தும் அதன் நடைமுறைகள் குறித்தும் முன்னைய பதிவில் குறிப்பிடப்பட்டது.
இந்தப் பதிவில் NLQ பரீட்சை குறித்தும் அதன் நடைமுறைகள் குறித்தும் ஆராயவிருக்கின்றோம்.
NLQ பரீட்சைகள் என்றால் என்ன?
NLQ என்பது தேசிய மொழித் தகைமை என்பதாகும். அரச மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக 2007.07.01 ஆம் திகதிக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்களும், பதவி உயர்வு பெற்றவர்களும், தான் சேவைக்கு இணைந்துகொண்ட மொழியல்லாத அடுத்த அரச கருமமொழி குறித்த தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும். இவ்வாறு தமது சேவைக்காலத்தில் ஒரு முறை தங்களது தேர்ச்சியை வௌிப்படுத்திவிட்டு அந்த மொழியை மறந்துவிடுகின்ற நிலை ஏற்படலாம். எனவே மேலும் இந்த மொழித் தகைமைகளை வளர்த்துக்கொள்வதனை ஊக்குவிப்பதற்காக பரீட்சை ஒன்றை நடாத்தி அதில் சித்தியடைபவர்களுக்கு ஒரு தொகை கொடுப்பனவு, மற்றும் மேலும் சலுகைகள் வழங்குவகின்ற நடவடிக்கை NLQ பரீட்சை ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
NLQ பரீட்சையில் சித்தியடையும் போது என்ன கொடுப்பனவு கிடைக்கப்பெறும்?
இந்த தேசிய மொழித் தகைமையில் சித்தியடைகின்ற அனைத்து ஊழியர்களுக்கும் கீழ்வரும் அடிப்படையில் புள்ளிகளுக்கு அமைய கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
80 – 100 வரையான புள்ளிகளைப் பெறும் போது - ரூபா. 25,000/-
65 – 79 வரையான புள்ளிகளைப் பெறும் போது - ரூபா. 20,000/-
50 – 64 வரையான புள்ளிகளைப் பெறும் போது. ரூபா.15,000/-
இந்த ஊக்குவிப்புத் தெகை ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும்.
NLQ பரீட்சையில் சித்தியடைந்து குறைந்த புள்ளிகளைப் பெற்ற ஒருவர் அடுத்த பரீட்சையில் கூடிய புள்ளி பெற்றால் மீதித் தொகை வழங்கப்படுமா?
யாரேனும் ஒருவர் முதலாவது முறை பரீட்சையில் தோற்றி 15,000 ரூபா அல்லது 20,000 ரூபா கொடுப்பனவைப் பெற்ற நிலையில் மீண்டும் அந்தப் பரீட்சையில் அமர்ந்து முன்னரை விட அதிகமான புள்ளிகளைப் பெறுவாறானல் அந்த புள்ளிகளுக்கு உரிய தொகையில் முன்னர் கொடுத்த தொகை கழித்து மீதி வழங்கப்படும்.
அதாவது 55 புள்ளிகளைப் பெற்று ரூபா.15,000/- கொடுப்பனவினைப் பெற்றுக்கொண்ட ஒருவர் மீண்டும் ஒரு முறை பரீட்சைக்குத் தோற்றி 82 புள்ளிகளைப் பெற்றுக்கொள்வாரானால் அவருக்கு வழங்க வேண்டிய ரூபா. 25,000/- மொத்தக் கொடுப்பனவில் ஏற்கனவே வழங்கிய கொடுப்பனவான ரூபா. 15,000/- கழித்துவிட்டு மீதி ரூபா. 10,000/- வழங்கப்படும். இதேபோன்று 20,000 ரூபாவுக்குரிய புள்ளிகள் பெறுமிடத்து அதற்கான தொகையும் வழங்க்படும்.
எவ்வாறாயினும் ஒருவரது சேவைக்காலத்தில் தேசிய மொழித்தேர்ச்சிக்காக பெற்றுக்கொள்ள முடியுமான ஆகக்கூடிய கொடுப்பனவுத் தொகை ரூபா. 25,000/- ஆகும். இந்தத் தொகையைவிட அதகமான தொகை எந்தக் காரணம் கொண்டும் வழங்கப்படமாட்டாது.
NLQ பரீட்சையில் முதல் தடவை பெற்ற புள்ளிகளைவிட குறைந்த புள்ளிகளை அடுத்த பரீட்சையில் பெற்றால் முன்னர் பெற்ற கொடுப்பளவினை திரும்பச் செலுத்த வேண்டுமா?
முதல் தடவை பெற்ற புள்ளிகளை விட குறைந்ந புள்ளிகள் பெற்றதற்காக முன்னர் பெற்ற கொடுப்பளவினை திரும்பச் செலுத்தவேண்டிய அவசியமில்லை. அந்தக் கொடுப்பனவானது அப்போது பெற்ற தகைமைக்காகவே வழங்கப்பட்டது என்பதுடன் அது திரும்ப பெறப்படுவதில்லை.
NLQ பரீட்சையில் சித்தியடையும் போது வேறு என்ன நன்மைகள் வழங்கப்படுகின்றன?
இந்தப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு மேற்படி கொடுப்பனவுக்கு மேலதிகமாக ஓய்வூதியம் உரித்தில்லாத சம்பளப்படியேற்றம் (INCREMENT) ஒன்று மாதாந்தம் வழங்கப்படும். இந்த சம்பள ஏற்றத்தைப் பெறுவதற்கு 50 புள்ளிகளுக்கு மேல் பெறுவது போதுமானது.
இந்த சம்பளப் படியேற்றத்தைத் தொடந்து பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் 5 வருடங்களுக்கு ஒருமுறை பரீட்சையில் தோற்றி 50க்கு அதிகமான புள்ளிகளைப் பெறவேண்டும்.
5 வருடங்களுக்கு ஒரு முறை தனது மொழித் தேர்ச்சியை விருத்தி செய்துகொள்வதற்கு முயற்சிக்கும் ஒருவருக்கு குறித்த பாடநெறிகளை ஏற்பாடுசெய்து கொடுக்குமாறும், ஒரு வாரத்துக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் சேவை விடுமுறை வழங்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு ஆறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழித் தேர்ச்சிக்கான ஒரு சம்பளப் படியேற்றத்தினைப் பெறுகின்றவர்களுக்கு இந்த மேலதிக படியேற்றம் கிடைக்குமா?
ஆங்கில மொழித்தேர்ச்சிக்கான சுற்றுநிருபம் இன்னும் அமுலில் உள்ளது எனவே அந்தக் கொடுப்பனவைப் பெறுபவர்களுக்கு அந்தக் கொடுப்பனவைப் பெறுகின்ற அதே நேரம் மேலதிகமாக இந்தக் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளலாம். அந்த அடிப்படையில் மாதாந்தம் இரண்டு படியேற்றங்கள் இவர்களுக்கு பெறலாம்.
பரீட்சையின் கட்டமைப்பு என்ன?
செவிமடுத்தல், வாசிப்பு, எழுத்து, பேச்சு என நான்கு பகுதிகளும் உள்ளடங்கும் விதமாக பரீட்சை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
செவிமடுத்தல் - ஒரு மணித்தியாலயம் கொண்ட இந்த வினாத்தாள் 4 பகுதிகளைக் கொண்டிருக்கம். 40 வினாக்களுக்காக 100 புள்ளிகள் வழங்கப்டும்.
வாசித்தல் - ஒரு மணித்தியாலயம் கொண்ட இந்த வினாத்தாள் 3 பகுதிகளைக் கொண்டிருக்கம். 40 வினாக்களுக்காக 100 புள்ளிகள் வழங்கப்டும்.
எழுத்து - ஒரு மணித்தியாலயம் கொண்ட இந்த வினாத்தாள் 2 பகுதிகளைக் கொண்டிருக்கம். 2 வினாக்களுக்காக 100 புள்ளிகள் வழங்கப்டும்.
பேச்சு - 30 நிமிடங்கள் கொண்ட இந்த வினாத்தாள் 4 பகுதிகளைக் கொண்டிருக்கம். வினத்தாளுக்காக 100 புள்ளிகள் வழங்கப்டும்.
பரீட்சை எப்போது யாரால் நடாத்தப்படும்?
இந்தப் பரீட்சையானது ஒவ்வொரு ஆண்டும் அரச மொழிகள் திணைக்ளத்தினால் நடாத்தப்படல் வேண்டும். அதிக விண்ணப்பதாரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமுகமாக ஒவ்வொரு காலாண்டும் என வருடத்தில் 4 முறைகள் பரீட்சை நடாத்தப்படும்.
பரீட்சை எவ்வாறு விண்ணப்பம் கோரப்படுகின்றது?
விண்ணப்பங்கள் இலங்கை அரச மொழிகள் திணைக்களத்தின் www.languagesdept.gov.lk எனும் இணைத்தளத்தின் ஊடாக கோரப்படும். இந்தப் பரீட்சைக்கான அறிவித்தல்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படமாட்டாது.
பரீட்சைக்கான கட்டண விபரம்
இந்தப் பரீட்சையில் தோற்றுகின்ற ஒவ்வொருவரும் பரீட்சைக் கட்டணமாக ரூபா 3000.00 செலுத்தவேண்டும். இந்தக் கட்டணத்ததை எந்த ஒரு இலங்கை வங்கிக் கிளையிலும் 'இலங்கை வங்கி . இராஜகிரிய, இலங்கை அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகத்தின் 7041541 எனும் கணக்கிற்கு செலுத்தலாம்.
வங்கியில் பணம் செலுத்துவதற்கான விண்ணப்பத்தில், பெயர் முகவரி குறிப்பிடும் இடத்தில் அதற்கு மேலதிகமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்ததைக் குறிப்பிட வேண்டும். அத்துடன் “NLQ EXAM” எனவும் குறிப்பிட வேண்டும்.
பணம் செலுத்துகின்ற படிவத்தை ஸ்கேன் செய்து அல்லது புகைப்படம் எடுத்து ஒன்லைன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அத்துடன் குறித்த படிவத்தினை பரீட்சை எழுதும் போது பரீட்சை அனுமதிப்பத்திரத்துடன் சமர்ப்பிக் வேண்டும்.
பரீட்சைக் கட்டணம் செலுத்திய பின்னர் எந்தக் காரணத்திற்கும் கட்டணம் மீள வழங்கப்படமாட்டாது
விண்ணப்பதாரியின் கையொப்பம் உறுதிப்படுத்தல்
விண்ணப்பதாரரின் கையொப்பம் நிறுவனத் தலைவரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
பரீட்சை எங்கு நடைபெறும்?
பரீட்சை ஒவ்வொரு மாகாணத்திலும் நடாத்தபட தீர்மாணிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களில் போதிய விண்ணப்பம் கிடைக்கப்பெறாத போது மேல்மாகாணத்திலோ அல்லது அண்மித்த மாகாணத்திலோ பரீட்சை நடாத்தப்படும்.
பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்
பரீட்சைக்கான விண்ணப்பிக்கின்றவர்களுக்கு பரீட்சை மாதிரி வினாத் தாள்கள் அடங்கிய புத்தகம் தபால் மூலம் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்டும்.