பல்கலைக்கழக பிரவேசத்திற்கான மாவட்ட ரீதியிலான ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளிகள் வௌியாகிவிட்டன. தற்போது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக பிரவேசம் குறித்து பல கேள்விகளை முன்வைக்கின்றனர். பழைய பாடத்திட்டம் புதிய பாடத்திட்டம் என்பவற்றின் அடிப்படையில் எவ்வாறு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர் என்ற கேள்வியை பலரும் முன்வைப்பதனால் அது தொடர்பான விளக்கத்தினை இந்தப் பதிவின் ஊடாக தருவதற்கு முயற்சிக்கின்றோம்.
இந்த கேள்விக்குப் போதுமான பதில் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2020 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக பிரவேசத்தினை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்காக பத்திரிகைகள் வாயிலாக வௌியிட்ட அறிவித்தலின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த அறிவித்தலில் குறிப்பிடும் விடயங்கள் விளங்கிக்கொள்வதில் சிரமம் இருக்கும் என்பதால் அதற்கான மேலதிகத் தௌிவுகள் உதாரணங்கள் ஊடாக இந்தப் பதிவில் தரப்படுகின்றது.
குறித்த அறிவித்தலை உங்களது வசதி கருதி தட்டச்சிட்டி எமது இணையத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றோம். அதனை கீழ்வரும் லிங்கில் பார்வையிடலாம்.
குறித்த அறிவித்தலை நீங்கள் வாசித்துப் பார்திருப்பீர்களாயின் அதன் ஆரம்பத்தில் "2020 இல் நடைபெறும் க.பொ.த. (உயர்தர) பரீட்சை தோற்றிய அபேட்சகர்களை இரண்டு தனித்துவமான சனத்தொகைகளாகக் கருதி SC (FR) விண்ணப்ப இல.29/2012 உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கமைய 2011 இல் க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கு பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது." என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதனை அவதானித்திருப்பீர்கள். இந்த நீதிமான்ற தீர்ப்பு என்ன என்பதனை விளங்கிக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதகக் கருதி அதன் விளக்கத்தையும் இணைத்துக்கொள்கின்றோம்.
SC (FR) விண்ணப்ப இல.29/2012 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னனி.
2011 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப்பரீட்சை புதிய
பாடத்திட்டம் பழைய பாடத்திட்டம் என்ற அடிப்படையில் நடைபெற்றது. அதனை அடுத்து
பரீட்சைத் திணைக்ளம் உயர் தரப்பரீட்சைக்கான முடிவை 2011.12.25 ஆம் திகதி வௌியிட்டது.இந்தப்
பரீட்சை முடிவின் போது பழைய பாடத்திட்டத்திற்கு வேறாகவும் புதிய
பாடத்திட்டத்திட்டற்கு வேறாகவும் பெறுபேறுகளை வௌியிட்டிருந்தது. அதன் பின்னர்
பரீட்சைப் பெறுபேற்றில் தவறு நிகழ்ந்திருக்கின்றது என்பதாகக் குறிப்பிட்டு
பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அதே நாளின் மாலை வேளையில்
மீண்டும் திருத்தப்பட்ட பெறுபேறாக புதிய பெறுபேற்றினை வௌியிட்டது. புதிய பெறுபேறு
வௌியிடும் போதுஇரண்டு பாடத்திட்டங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே
பெறுபேறாக வௌியிட்டது. அனைவருக்கும் ஒரு Zscore வெட்டுப்புள்ளிகளே வழங்கப்பட்டது.
அத்துன்
குறித்த பெறுபேற்றுப் பத்திரத்தில் கலைப் பிரிவில் தோற்றியவர்களுக்கு விஞ்ஞானப்
பிரிவு பெறுபேறு கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதுமாத்திரமன்றிமுன்னைய பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் பழைய
பாடத்திட்டத்தில் பரீட்சை எழுதிய ஒருவர் மாவட்டத்தில் முதலாவதாக வந்திருப்பார். அதன் பின்ன குறித்த பரீட்சைப் பெறுபேறு இரத்துச் செய்யப்பட்டு
இரண்டு பாடத்திட்டங்களையும் ஒன்றாகக் கருதி பெறுபேறு வௌியிட்டமையினால் அவரது
மாவட்ட நிலை பின்னோக்கிச் செல்கின்றது. இவ்வாறு மாவட்ட நிலை பின்னோக்கிச் சென்றதன்
விளைவாக தங்களது பல்கலைக்கழகப் பிரவேசம் பாதிக்கப்படுமோ என்பதாக பழைய
பாடத்திட்டடத்தில் பரீட்சை எழுதிய மாணவர்கள் பலர் அச்சம் கொண்டனர். தங்களுக்கு
நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்யத் துவங்கினர்.
இதனைத் தொடர்ந்து 16 மாணவர்களும் இலங்கை ஆசிரியர் சங்கமும் அடிப்படை உரிமை மீரல் வழக்கொன்றினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பெறுபேறு தரப்படுத்தலின் போது பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய இரு பிரிவு மாணவர்களுக்கும் தனித் தனியான (Z)இசட் புள்ளியை பயன்படுத்துமாறும், பெறுபேறுகளில் நடைபெற்றிருக்கும் மேலும் பல தவறுகள் காரணமாக, மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அப்பெறுபேறுகளை செல்லுபடியற்றதாக்கி, மீண்டும் மதிப்பீடுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு கட்டளையிடுமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
எவ்வாறெனினும், பரீட்சை முடிவுகளை முழுமையாக இடை நிறுத்த வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களின் கீழ் வெவ்வேறாக இசட் புள்ளிகள் கணக்கிடப்பட வேண்டும் என்று மட்டும் கட்டளையிட்டது.
இந்த வழக்குத் தீர்ப்பையே மேலுள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலில் மேற்கோல் காட்டப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படும் முறைகள்.
புதிய பாடத்திம் பழைய பாடத்திட்டம் என்பவற்றின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளும் விதம்
புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 3 வருடங்களுக்கு புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டம் என்பவற்றில் பரீட்சை நடாத்தவேண்டிய கட்டாயம் பரீட்சைத் திணைக்களத்துக்கு காணப்படும். அவ்வாறு பரீட்சை நடாத்தி பெறுபேறு கிடைத்ததன் பின்னர் அவர்களை எந்த விகிதத்தில் பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பது என்ற பிரச்சினை ஏற்படும். இந்தப் பிரச்சினை காரணமாகவே 2011 ஆம் ஆண்டு போராட்டங்கள் ஏற்படவும் காரணமாக அமைந்தது. எனினும் இதற்குத் தீர்வாக கீழே குறிப்பிடப்படும் வழிமுறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பின்பற்றப்பட்டதாக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஏதாவது ஒரு பல்கலைக்கழக பாடநெறிக்காக 2019 ஆம் ஆண்டுக்கு முன்னைய ஆண்டுகளில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். ஒரு மாணவர் 3 முறைகள் உயர் தர பரீட்சைக்குத் தோற்றலாம் என்ற அடிப்படையில் மேற்படி மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் போது முதலாவது முறை பரீட்சை எழுதியவர்களும் இரண்டாவது மூ்ன்றாவது முறைகளில் பரீட்சை எழுதியர்களும் என்ற அடிப்படையில் மூன்று பகுதியினர் காணப்படுவார்கள். குறித்த பாடநெறியில் கடந்த வருடங்களில் உள்வாங்கப்பட் இந்த மூன்று பிரிவினரின் தொகையினை அடிப்படையாகக் கொண்டு இந்த வருடத்துக்கான புதிய பாடத்திட்டத்திற்கும் பழைய பாடத்திற்கும் உள்வாங்கப்படும் வீதம் கணிப்பிடப்படுகின்றது.
அதாவது 2019 ஆம் ஆண்டுக்கு முன்னைய 5 வருடங்களில் (2014,2015,2016,2017,2018) குறித்த பாடநெறிக்கு தெரிவான மொத்த மாணவ்ர்களில் முதலாவது மற்றும் இரண்டாவது விடுத்தங்களில் உயர் தரப் பரீட்சை எழுதிவந்த மாணவர்களின் விகிதம் புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்கப்படும் வீதமாகவும் மூன்றாவது முறை உயர் தரம் எழுதி உள்வாங்கப்பட்ட தொகையினர் பழைய பாடத்தில் பரீட்சை எழுதியவர்கள் உள்வாங்கப்படும் தொகையாக அனுமானிக்கப்படுகின்றது.
உதாரணமாகக் குறிப்பிடுவதாயின் பொறியியல் பாடநெறிக்காக வருடாந்தம் 200 பேர் வீதம் 5 வருடங்களுக்கும் 1000 பேர் உள்வாங்கப்படுகின்றனர் என வைத்துக்கொள்வோம். இந்த 1000 பேர்களில் முதல் தடவையில் உயர் தரம் சித்தியடைந்து பாடநெறிக்கு வந்தர்கள் 500 பேர்களும் இரண்டாவது முறையில் சித்தியடைந்து வந்தவர்கள் 300 பேர்களும் மூன்றாவது முறை சித்தியடைந்து வந்தவர்கள் 200 பேர்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
மேற்படி கணிப்பீட்டின் அடிப்படையில் முதல் இரண்டு தடவைகளின் கூட்டுத்தொகையான (500+300) 800 என்பது 80% ஆகும் மூன்றாவது முறையில் பரீட்சை எழுதி வந்தவர்களின் தொகையான 200 இனை வீதத்தில் குறிப்பிடுவதாயின் 20% ஆகும் அந்த அடிப்படையில் இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடத்திட்டத்திற்கு 80% மாணவர்களையும் பழைய பாடத்திட்டத்திற்கு 20% மாணவர்களும் என்ற அடிப்படையில் இரண்டு பாடத்திட்டங்களிலிருந்தும் இணைத்துக்கொள்ளப்படுவர்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்தல்.
பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு வருடம் புதிதாக பல கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படுவதுண்டு இவ்வாறு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடநெறிகளில் 5 வருடங்களுக்கான தகவல்கள் இருக்கப்போவதில்லை என்பதனால் இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அதாவது பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்கள் தான் ஆகின்றது எனில் அந்த இரண்டு வருடங்களுக்கும் இணைக்கப்பட்ட மாணவர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்குறிப்பிடப்பட்ட ஒழுங்கில் புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டம் என்பவற்றுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
மேலே குறிப்பிடப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் நாடாலாவிய ரீதியிலும் மாவட்டங்களிலிலிருந்து முதலாவது இரணடாவது மூன்றாவது முறைகளில் உயர் தரம் சித்தியடைந்த மாணவர்கள் எத்தனை பேர் பாடநெறிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றார்கள் என்ற அடிப்படையில் 2020/2021 ஆம் ஆண்டுக்காக புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களில் சித்தியடைந்தவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
அத்துடன் இரண்டு அடிப்படைகளிலும் பல்கலைக்கழக கைநூலில் குறித்த யுனிகோடின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையினர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இப்போது உங்களுக்காக மாவட்ட மற்றும் தேசிய வெட்டுப்புள்ளிகள் வௌியாகியிருப்பதுடன் நீங்கள் விண்ணப்பித்த படநெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்ற விபரமும் உங்களுக்கு இப்போது கிடைக்கப்பெற்றிருக்கும். இந்த முடிவு இறுதியானதல்ல.. உயர் தரப் பரீட்சை மீள்திருத்தத்திற்காக பலர் விண்ணப்பித்திருப்பீர்கள் அதற்கான பெறுபேறுகள் வந்த பின்ன வெட்டுப்புள்ளிகளில் மாற்றங்கள் ஏற்படலாம். தெரிவு செய்யப்படாத சிலர் மீண்டும் தெரிவாகலாம்.
அது மாத்திரமல்ல பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பாடநெறிகளுக்காக தெரிவாகியிருக்கலாம், அவர்கள் பெறுமதி கூடிய பாடநெறிகளுக்கு செல்லும் போது பல இடங்கள் வெற்றிடமாகலாம் அந்த இடங்களுக்கு இப்போது தெரிவாகாதவர்கள் தெரிவாகிவிடலாம். இது குறித்த விளக்கங்கள் அடுத்தடுத பதிவுகளில் தரப்படும். காத்திருங்கள்.
பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்லை பதிவிறக்கம் செய்ய Click here
நாடலாவிய மாவட்ட ரீதியில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களில் பாடநெறிகளுக்கு உள்வாங்கும் வீதங்கள் குறித்த பட்டியலை பதிவிறக்கபம் பார்வையிட Click Here