2020/2021 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் தங்களது சாதாரண அனுமதியின் கீழ் பரீட்சார்த்திகளின் தெரிவு செய்யும் செயன்முறை பூரணப்படுத்தப்பட்டதன் பின்னர் சாதாரண அனுமதி சம்பந்தமாக பரீட்சார்த்திகளால் செய்யப்படும் மேன்முறையீடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக மேன்முறையீட்டுக் குழு ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நியமிக்கின்றது.
அந்த அடிப்படையில் மேன்முறையீடுகள் பின்வருவோரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படும். என்பதாக பல்கலைக்கழ கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கைநூலின் 03 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிக்கு தெரிவுக்கென பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பாடநெறிக்கான அனுமதிக்காக அறிவிக்கப்பட்ட ஆகக்குறைந்த ‘Z’ புள்ளிகளைக் கொண்டிருந்தும் தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரிகள்.
உதாரணமாக உங்களது ‘Z’ புள்ளிகள் 0.235 என வைத்துக்கொள்வோம். நீங்கள் தெரிவு செய்த பாடநெறியிகெக் குறைந்த வெட்டுப்புள்ளியாக 0.220 எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. உங்களது வெட்டுப்புள்ளி குறித்த பாடநெறியின் ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளியாக இருந்த போதிலும் நீங்கள் தெரிவுசெய்யப்படவில்லை என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் உங்களது விண்ணப்பத்தை மீள் பரிசீலனை செய்வதற்காக மேன்முறையீடு செய்யலாம்.
(ஆ) கைநூலின் 03 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிக்கு தெரிவுக்கென பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் ஒரு குறித்த கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டு, ஆனால் தாம் குறிப்பிட்ட வேறொரு கற்கை நெறிக்குத் தகுதியுடையவர்களெனக் கருதும் விண்ணப்பதாரிகள்.
அதாவது நீங்கள் ஒரு பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் அந்தப் பாடநெறிக்கு முன்னர் தெரிவு செய்யத பாடநெறிக்கான ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளியை விட அதிக வெட்டுப்புள்ளிகளை எடுத்திருக்கின்றீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் இப்போது தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற பாடநெறியினை விட அதற்கு முன்னதாக தெரிவு செய்த பாடநெறிக்கு தெரிவு செய்யப்படுவதை விரும்புகின்றீர்கள் எனில் நீங்கள் உங்களது விண்ணப்பத்தை மீள் பரிசீலனை செய்வதற்காக மேன்முறையீடு செய்யலாம்.
.
(இ) அனுமதிக்கான தேவைப்பாடுகள் நிறைவேற்றியிருந்தால் தமது கற்கை நெறியை விண்ணப்பத்தில் குறைந்த விருப்புரிமையாக குறிப்பிட்ட இன்னொரு கற்கை நெறிக்கு மாற்றுவதற்கு கோரிக்கை விடுக்கும் விண்ணப்பதாரிகள். (கற்கை நெறியின் மாற்றமொன்றுக்கான மேன்முறையீடுகளை கரிசனைக்கு எடுக்க வேண்டுமாயின், குறிப்பிட்ட கற்கை நெறியில் வெற்றிடங்கள் இருக்க வேண்டும். வெற்றிடங்களை விட அதிகளவு விண்ணப்பதாரிகள் இருந்தால் மாணவர்களின் Z புள்ளி ஒழுங்கு கரிசனைக்கு எடுக்கப்படும்.)
நீங்கள் விருப்பத்தெரிவாக குறிப்பிட்ட பாடநெறிகளில் தெரிவு செய்யப்பட்ட பாடநெறிக்கு அடுத்து வருகின்ற பாடநெறிகளில் ஒன்றை விரும்புகின்ற போது அதற்காக நீங்கள் மேன்முறையீடுசெய்யலாம்.
(ஈ) குறித்த கற்கைநெறிக்கு விண்ணப்பிக்காத, அந்த கற்கைநெறிக்கான அனுமதிக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள். (இந்தப் பிரிவில் மேன்முறையீடுகளை கரிசனைக்கு எடுக்கவேண்டுமாயின் சம்பந்தப்பட்ட கற்கை நெறியில் வெற்றிடம் இருக்க வேண்டும். வெற்றிடங்களை விட அதிகளவு மேன்முறையீட்டாளர்கள் இருந்தால் மாணவர்களின் Z புள்ளி ஒழுங்கு கரிசனைக்கு எடுக்கப்படும்.)
நீங்கள் ஒரு பாடநெறிக்கு விண்ணப்பிக்கவில்லை ஆனால் தற்போது அதனை விருப்புகின்றீர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் விண்ணப்பிக்காத அந்தப் பாடநெறியின் ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் உங்களது Z புள்ளி இருக்குமானால் நீங்கள் மேன்முறையீடு செய்யலாம். இதற்காக நீங்கள் மேன்முறையீடு செய்கின்ற பாடநெறிக்கான வெற்றிடங்களின் அளவு குறைவாக இருக்கும் போது உங்களது மேன்முறையீடு கருத்தில் எடுக்கப்படும்.
பின்வருவன தொடர்பாக செய்யப்படும் மேன்முறையீடுகளை மேன்முறையீட்டுக் குழு கருத்திலெடுத்துக்கொள்ளாது என்பதுடன், அத்தகைய மேன்முறையீட்டாளர்களுக்கு உங்களது மேன்முறையீடு கிடைத்தமை குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படமாட்டாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது., அத்துடன் மேன்முறையீட்டுக்காக நீங்கள் செலுத்திய கொடுப்பனவுகள் மீளளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
i. விசேட ஏற்பாடுகளின் கீழ் அனுமதி.
ii. மேலதிக அனுமதியின் கீழ் விசேட பாடங்களுக்கான அனுமதி.
iii. வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி.
மேன்முறையீடு செய்ய விரும்புவோர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக நுழைவு தொடர்பான கைநூலின் பகுதி 10 இல் இணைப்பு-I வழங்கப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, வெட்டுப்புள்ளி (வெ.பு) பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு (4) வாரங்களுக்குள் எழுத்தில்,Senior Assistant Secretary, Appeals Committee on
University Admissions, C/o University Grants Commission, No. 20, Ward Place, Colombo 07 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மேன்முறையீடுகள் வெட்டுப்புள்ளி வௌியிட்டு 4 வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும் அந்த வகையில் 29.10.2021 அன்று வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டது. அந்த அடிப்படையில் மேன்முறையீடு சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 26.11.2021 ஆகும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “Appeals - University Admissions”
என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு மேன்முறையீட்டிற்கும் ரூபா 500/- கொடுப்பனவு செய்யப்பட வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பணம் செலுத்துவதற்கான கொடுப்பனவுப் பட்டோலையை நிரப்பி, இலங்கை வங்கியின் அல்லது மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் இலங்கை வங்கியின் சுதந்திரச் சதுக்க கிளையிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் திரட்டுக் கணக்கு இலக்கம் 0002323287 இன் அல்லது மக்கள் வங்கியின் நகர மண்டபக் கிளையிலுள்ள திரட்டுக் கணக்கு இலக்கம் 167-1-001-4-3169407இன் வரவிற்கு இக்கொடுப்பனவு செய்யப்பட வேண்டும்.
பழைய பாடத்திட்டம் புதிய பாடத்திட்டம் என்பவற்றின் அடிப்படையில் எவ்வாறு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர் என்பது தொடர்பில் 2012 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகள் வௌியானதன் பின்னர் உயர் நீதிமன்றம் வழங்கிய வழக்குத் தீர்பொன்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழf மானியங்கள் ஆணைக் குழு தீர்மானிக்கின்றது. அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது தொடர்பான விளக்கம் உள்ளடங்களி பதிவை கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து வாசிக்கலாம்.
ஒவ்வொரு மேன்முறையீட்டுடனும் மேற்கூறிய வங்கிகளில் ஒன்றின் இலச்சினை பொறிக்கப்பட்டு அதிகாரமுடைய அலுவலர் ஒருவரினால் ஒப்பமிடப்பட்ட கொடுப்பனவு பட்டோலையின் அடிக்கட்டை இணைக்கப்பட வேண்டும். இப்பணம் செலுத்தப்படாத எந்த மேன்முறையீடும் ஏற்றுக்கொள்ளப் படவோ பதிலழிக்கப்படவோ மாட்டாது. மேலும், பூரணப்படுத்தப்படாத தெளிவற்ற மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும்.
பல்கலைக்கழகங்களின் பாடநெறிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புகின்ற செயன்முறை குறித்த விளக்கத்தினை அடுத்த பதிவில் ஆராய்வோம்.